மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு சென்றபோது டேங்கர் லாரியில் கியாஸ் கசிவு
மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு சென்றபோது டேங்கர் லாரியில் கியாஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாசன்,
மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு சென்றபோது டேங்கர் லாரியில் கியாஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து பெங்களூரு நோக்கி சமையல் எரிவாயு நிரப்பிக் கொண்டு நேற்று கியாஸ் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா டவுன் அருகே பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டேங்கர் லாரியில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனை உணர்ந்த டிரைவர், உடனடியாக டேங்கர் லாரியை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் இதுகுறித்து மங்களூருவில் உள்ள எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கும், சக்லேஷ்புரா டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சக்லேஷ்புரா டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள், கியாஸ் டேங்கர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். டேங்கரில் கியாஸ் கசிவு ஏற்பட்டதால், அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் அந்தப்பகுதியில் வசித்து வந்த மக்கள் வேறு பகுதிக்கு அவசர, அவசரமாக மாற்றப்பட்டனர்.
இதையடுத்து அந்த டேங்கர் லாரி, ‘ஜீரோ’ போக்குவரத்து வசதியுடன் தொட்டநகரா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து கியாஸ் கசிவு சரி செய்யப்பட்டு, டேங்கர் லாரி அங்கிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது.
டேங்கர் லாரியில் கியாஸ் கசிவு ஏற்பட்டதால், பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சக்லேஷ்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.