சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 10 இடங்கள் தான் கிடைக்கும் ; மந்திரி ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கூறுகிறார்

சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 10 இடங்கள் தான் கிடைக்கும். 21-ந் தேதிக்கு பிறகு அந்த கட்சிக்கு எதிர்காலம் இல்லை என மந்திரி ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கூறினார்.;

Update:2019-10-15 05:34 IST
மும்பை, 

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து மந்திரியான ராதாகிருஷ்ண விகே பாட்டீல், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஷீரடி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். அவர் நேற்று அகமதுநகர் மாவட்டம் சங்கம்னேரில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டை ஒருங்கிணைக்க தான் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. தேசிய ஒருமைப்பாடு தான் தன்னுடைய கொள்கை என காங்கிரஸ் கட்சி சொல்கிறது. ஆனால் அந்த கட்சி மத்திய அரசின் முடிவை எதிர்க்கிறது. காங்கிரஸ் தனது சித்தாந்தத்தில் இருந்து வெகுகாலத்திற்கு முன்பே விலகிவிட்டது.

2014 சட்டசபை தேர்தலின் போது, அந்த கட்சி தோல்வியை தழுவியதற்கு இது தான் காரணம். வருகிற 21-ந் தேதிக்கு பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை. பா.ஜனதா- சிவசேனா கூட்டணி 220 முதல் 230 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். பா.ஜனதா அதிக இடங்களில் வென்று நம்பர் 1 கட்சியாக இருக்கும். தேசியவாத காங்கிரசுக்கு 25 முதல் 30 தொகுதிகளும், காங்கிரசுக்கு 10 முதல் 12 தொகுதிகளுமே கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்