அந்தேரியில் 22 மாடி கட்டிடத்தில் தீ; 50 பேர் பத்திரமாக மீட்பு
அந்தேரியில் 22 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் சிக்கியிருந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மும்பை,
மும்பை அந்தேரி மேற்கு, வீர் தேசாய் ரோட்டில் 22 மாடிகளை கொண்ட ‘பெனின்சுலா பிசினஸ் பார்க்’ என்ற கட்டிடம் அமைந்து உள்ளது. நேற்று மதியம் இந்த கட்டிடத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து கொண்டு இருந்தனர்.
மதியம் 12.45 மணியளவில் கட்டிடத்தின் 6-வது மாடியில் உள்ள மின் வயரில் திடீரென தீப்பிடித்தது. இதைப்பார்த்து கட்டிடங்களில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
இதற்கிடையே தீ மள, மளவென மின் வயர்களில் பிடித்து 12-வது மாடி வரை பரவியது.
இந்தநிலையில் தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வாகனங்கள், அதிவிரைவு மீட்பு வாகனம், 3 ராட்சத தண்ணீர் டேங்கர்கள், 2 மடக்கும் வசதி கொண்ட ராட்சத ஏணிகள், 6 ஆம்புலன்ஸ்களில் விரைந்து வந்தனர். அவர்கள் ராட்சத ஏணி மூலம் அரை மணி நேரத்தில் கட்டிடத்தில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். மேலும் கட்டிடத்தின் 11-வது மாடியில் சிக்கியிருந்த 3 பேரை லேசான காயங்களுடன் மீட்டனர்.
இதேபோல கட்டிடத்தின் மொட்டை மாடியில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.