கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அரசியலில் இருந்து ஓய்வு? அவரே வெளியிட்ட தகவலால் பரபரப்பு

யாரையும் நம்ப முடியவில்லை என கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆதங்கப்பட கூறியதுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலால் அவரது கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-10-14 23:30 GMT
பெங்களூரு, 

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவேகவுடாவின் இளைய மகன் எச்.டி.குமாரசாமி.

கர்நாடக மாநில ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவராக இருந்த இவர், 2 முறை மாநில முதல்- மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

இதனால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. இந்த கூட்டணியில் குமாரசாமி 2-வது முறையாக முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 14 மாதங்கள் குமாரசாமி முதல்-மந்திரி பதவியை அலங்கரித்தார். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் குமாரசாமி 14 மாதங்கள் ஆட்சியை நடத்தினார்.

இந்த நிலையில், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. அதன்பிறகு காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்கள். இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி முறிந்தது.

இதற்கிைடயே, குமாரசாமிக்கு நெருக்கமாக இருந்த எச்.விஸ்வநாத், கட்சிக்கு எதிராகவும், குமாரசாமி, தேவேகவுடாக்கு எதிராகவும் கடுமையாக பேசினார். மேலும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ஜி.டி.தேவேகவுடாவும், கட்சிக்கு எதிராக பேசுவதுடன், பா.ஜனதா தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி வருவதால், கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சி பாதாளத்தை நோக்கி செல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இதுபோன்ற காரணங்களால் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மன உளைச்சல் அடைந்துள்ளார். .

இந்த நிலையில், மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள மாதேஸ்வர்புரா கிராமத்தில் புதிதாக மாதேஸ்வரா கோவில் நிறுவப்பட்டது. அந்த கோவில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி கலந்து கொண்டு கோவிலை திறந்துவைத்து பேசியதாவது:-

நான் ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிகொண்டிருந்தவன் கிடையாது. அதிகார ஆசையும் எனக்கு இல்லை. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து ஆலோசித்து வருகிறேன். யாரையும் நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு இன்றைய அரசியல் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. இதனால் எனக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

நான் 2-வது முறையாக முதல்-மந்திரி ஆனதற்கு மண்டியா மக்கள் தான் காரணம். இங்கு 7 தொகுதிகளிலும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தனர். மண்டியா மக்கள் என்னை தங்கள் வீட்டு பிள்ளையாகவே கருதுகிறார்கள்.

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். பெலகாவி விவசாயிகளும் பயன் பெற்றனர். அங்குள்ள மக்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஓட்டுப்போடுவது இல்லை என்று கருதி அவர்களை நான் கைவிடவில்லை.

எனக்கு நெருக்கமானவர்களே என்னை விட்டு விலகி செல்கிறார்கள். இதனால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். அரசியல் தேவையா? என்று நினைக்க தோன்றுகிறது. ஆனாலும் என்னை நம்பியுள்ள மக்களுக்காக அரசியலில் நீடித்து வருகிறேன்.

வருமான வரித்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. அரசியல் எதிரிகளை ஒடுக்க வருமான வரி சோதனையை எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து நடத்துகிறார்கள். இது சரியல்ல.

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது எனது சக்தியை மீறி பணியாற்றினேன். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினேன். விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் அடைந்தனர்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

குமாரசாமி அரசியலில் இருந்து ஓய்வு பெற ஆலோசிப்பதாக கூறிய தகவலால் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்