அரசியலமைப்பு சட்டத்தை திருத்தினால் நாட்டில் ரத்த ஆறு ஓடும் - சித்தராமையா எச்சரிக்கை
அரசியலமைப்பு சட்டத்தை திருத்தினால் நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து பேசியதாவது:-
அம்பேத்கர் தலித் மக்களுக்கு மட்டும் ஆதரவாக நிற்கவில்லை, ஒடுக்கப்பட்ட, சாதியால் பாதிக்கப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கு ஆதரவாகவும் போராடினார். இந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க தீவிரமாக பாடுபட்டார்.
சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் சமவாய்ப்பை அம்பேத்கர் வழங்கியுள்ளார். அதனால் அவர் வகுத்த அரசியலமைப்பு சட்டத்தை சிலர் எதிர்க்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முயற்சி செய்தால், நாட்டில் ரத்த ஆறு ஓடும். அதுபற்றி யோசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
இதே போல் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, அரசியலமைப்பு சட்டத்தில் கைவைத்தால் ரத்த ஆறு ஓடும் என்று சித்தராமையா கூறினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மந்திரியாக இருந்த அனந்தகுமார் ஹெக்டே ஒரு கூட்டத்தில் பேசும்போது, அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு தான் நாங்கள் இருக்கிறோம் என்று கூறி பெரும் சர்ச்சைைய கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.