புதிய கலெக்டராக வினய் பதவியேற்பு; நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பேட்டி

மதுரை மாவட்ட புதிய கலெக்டராக வினய் பதவியேற்று கொண்டார். அப்போது நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று அவர் பேட்டியளித்தார்.

Update: 2019-10-14 23:00 GMT
மதுரை,

மதுரை மாவட்ட கலெக்டராக ராஜசேகர் பணியாற்றி வந்தார். அவர் விடுப்பு எடுத்து சென்றதை தொடர்ந்து மாவட்ட நிர்வாக பொறுப்பை வருவாய் அலுவலர் செல்வராஜ் கவனித்து வந்தார். இந்த நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டராக இருந்த வினய், மதுரை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர் நேற்று காலை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முறைப்படி பதவியேற்று கொண்டார். பின்னர் புதிய கலெக்டர் வினய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய-மாநில அரசுகளின் முக்கிய திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் கொண்டு செல்லப்படும். வருவாய்த்துறை சார்பில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் திட்டங்களான அனைவருக்கும் வீடு, இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நத்தம் புறம்போக்கு நிலங்களில் பட்டா வழங்குவது வரைமுறைப்படுத்தப்படும். பசுமை வீடுகள் உள்ளிட்ட அரசு திட்டங்களின் மூலம் அனைவருக்கும் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து சிறப்பு கவனம் செலுத்தப்படும். ஊரக வளர்ச்சி திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் குடிமராமத்து பணி நடந்து வருகிறது. அந்த பணிகள் விரைந்து முடிக்கப்படும். மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் தேவைகள் மற்றும் புதிய திட்டங்களை தொடங்க உயர் அதிகாரிகளுடன் பேசி சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்