நயினார்கோவில் பகுதியில் தொடர் மின்தடை; மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நயினார்கோவில் பகுதியில் தொடர் மின்தடை ஏற்பட்டு வருவதால், மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;

Update: 2019-10-14 22:30 GMT
நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பகுதியில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல சிறு, குறு தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புழுக்கத்தாலும், கொசு தொல்லையாலும் தூக்கமின்றி பரிதவித்து வருகின்றனர். நயினார்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

இதுபற்றி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அப்போது மின்வாரிய அதிகாரிகளிடம் நயினார்கோவில் பகுதிக்கு தனி மின் பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்