திருவள்ளூரில் 4-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

திருவள்ளூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து விழுந்த பட்டாசு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-10-14 22:30 GMT
திருவள்ளூர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 35). இவருக்கு வடிவு (30) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பால்பாண்டி சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பால்பாண்டி தன் குடும்பத்துடன் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கம்மவார்பாளையம் பகுதியில் உள்ள 4 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் பால்பாண்டி, சம்பவத்தன்று மதுபோதையில் குடியிருப்பின் மாடிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் அங்கு இருந்து தவறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து தகவலறிந்த மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து, பால்பாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர் மதுபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்