சேலத்தில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை - 15 வயது சிறுவன் கைது
சேலத்தில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தம்பி மகனான 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்,
சேலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பத்மபிரியா (34). இவர்களுக்கு நந்தினி (15), நித்யா (9) என்ற மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பத்மபிரியா கணவரை, பிரிந்து தனியாக சென்றுவிட்டார். இதனால் ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியில் சரவணன் மட்டும் அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது தம்பி முருகேசன் (36). இவருடைய மனைவி ஜீவாவும் 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் 15 வயதான மூத்த மகன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முருகேசனுடன் கட்டிட வேலைக்கு சென்று வந்தான். அதாவது, பரமத்திவேலூரில் முருகேசனின் மனைவியுடன் அவரது இளைய மகன் வசித்து வந்தநிலையில், சேலத்தில் முருகேசன் தனது மூத்த மகனுடன் வசித்து வந்தார். இவர்கள் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
இதனிடையே, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முருகேசனுக்கும், அவரது அண்ணன் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மதுபோதையில் இருந்த சரவணன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன், தனது அண்ணன் சரவணனை அடித்து தாக்கியதாகவும், அவர்களை அக்கம் பக்கத்தினர் சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு சரவணன் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தம்பி வீட்டில் அவரது மகன் மட்டும் இருந்துள்ளான். இதை பார்த்த அவர், சிறுவனிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், தனது பெரியப்பா என்று பாராமல் உருட்டுக்கட்டையால் சரவணனை தலையில் சரமாரியாக தாக்கி அடித்துள்ளான். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, முதலில் படிக்கட்டில் தவறி விழுந்து சரவணன் இறந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த வீட்டில் படிக்கட்டுகளே இல்லை. இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சரவணனை அவரது தம்பி மகனே அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்