கம்பம் பகுதியில், கொத்தமல்லி தழை விளைச்சல் அமோகம்
கம்பம் பகுதியில் கொத்தமல்லி தழை விளைச்சல் அமோகமாக உள்ளது.
கம்பம்,
கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தென்னை, வாழை, திராட்சை சாகுபடியில் விவசாயிகள் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பீட்ரூட், நூல்கல், முள்ளங்கி, புடலை, வெண்டை, கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளும் பயிரிடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் கிணறு, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதனை பயன்படுத்தி கம்பம், நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சாமந்தி, மரிக்கொழுந்து, கொத்தமல்லி தழை, கீரை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கொத்தமல்லி தழை விளைச்சல் அமோகமாக உள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட கொத்தமல்லி தழை தற்போது அறுவடைக்கு வந்துள்ளது.
கொத்தமல்லி தழை நடவு செய்யப்பட்ட நாளில் இருந்து அவ்வப்போது மழை பெய்து வந்ததால் பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கிறது.
ஒரு கிலோ கொத்தமல்லி தழை ரூ.25 முதல் ரூ.30 விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.