நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை - நடிகை கு‌‌ஷ்பு பேட்டி

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று நடிகை கு‌‌ஷ்பு கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகை குஷ்பு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2019-10-13 23:00 GMT
தூத்துக்குடி, 

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை. அங்கு காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயமாக வெற்றி பெறுவார். ஏனென்றால் அங்கு காங்கிரஸ் நல்ல பல பணிகளை செய்து உள்ளது. இந்தியா முழுவதும் ஒரு நல்ல ஆட்சி இருக்க வேண்டும், எல்லோருக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும், வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும், விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அது காங்கிரசால் மட்டும்தான் முடியும். இது நாங்குநேரி தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். காங்கிரஸ் எம்.எல்.ஏ. தொகுதியில் நல்ல பணிகளை செய்ய ஆசைப்படுகிறார். ஆனால், எங்களை அரசு செய்யவிடாமல் தடுக்கிறது. தமிழக அரசும் நாங்குநேரி தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை. வேண்டுமென்றே அரசு ஒதுக்கி வைத்து உள்ளதா?

பிரதமர் மோடி, சீன அதிபருடனான சந்திப்பின்போது, வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். எல்லாவற்றையும் அரசியல் ரீதியாக பார்க்க முடியாது. உலக தலைவர்கள் சந்திப்பின்போது, வேட்டி, சட்டை அணிந்து அதனை உலக அரங்குக்கு எடுத்து செல்வது பெருமையாக உள்ளது. தூய்மை பாரதம் திட்டம் கொண்டு வந்தார்கள். பாராட்டக்கூடிய வி‌‌ஷயம் தான்.

அதேநேரத்தில் கோவளம் கடற்கரை பகுதி சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அங்கு பிரதமர் குப்பையை எடுக்கிறார். அந்த பகுதியில் மட்டும் எப்படி குப்பை வந்தது?. புகைப்படத்துக்காக ஒரு பிரதமர் இதுபோன்று செய்வது வேதனையாக உள்ளது.

பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தபோது ‘‘கோபேக் மோடி‘‘ என்ற வாசகம் இணையதளத்தில் பரவியது. என்னை பொறுத்தவரை ஒரு வெளிநாட்டு தலைவர் வரும்போது, நம் பிரதமருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

மேலும் செய்திகள்