தேனீ வளர்க்க மானியம்; வேளாண்மை அதிகாரி தகவல்

தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-13 21:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில், வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அட்மா திட்டத்தின்கீழ், விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு செயல் விளக்கங்கள் மானியத்திட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் தேனீ வளர்ப்பானது வேளாண் சார்ந்த தொழில்களில் அதிக முதலீடு இல்லாமல் தொடர்ந்து வருமானம் தரக்கூடிய உபத்தொழிலாகும். தேனீக்களால், அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்று வேளாண் உற்பத்தியும் அதிகரிக்க உதவுகிறது. ஒரு ஏக்கருக்கு சராசரியாக 810 தேனீ பெட்டிகள் தரையில் இருந்து மூன்று அடி உயரத்தில் வைக்க வேண்டும்.

ஒரு பெட்டியில் ராணி தேனீ ஒன்றும், நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்களும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைக்கார தேனீக்களும் காணப்படும். எண்ணெய் வித்து பயிர்களான, எள், சூரியகாந்தி, கடுகு மற்றும் தென்னை உள்ளிடவற்றில் அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுவதில் தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

காய்கறி பயிர்களில் கத்தரி, வெண்டை, தக்காளி, கொத்தமல்லி, பூசணி பயிர்கள், பழ வகை பயிர்களில் மா, கொய்யா, மாதுளை, அத்தி, பப்பாளி பயிர்களில் மகரந்த சேர்க்கை நடைபெற தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தேனீக்களில், மலைத்தேனீ, கொம்புத்தேனீ, இந்திய தேனீ, மற்றும் இத்தாலிய தேனீ என 4 வகைப்படும். அதில் மலைத்தேனீ அளவில் பெரியவை. இவற்றின் மூலம் வருடத்திற்கு அதிகபட்சமாக 60 கிலோ தேன் கிடைக்கும். இவை மகரந்தச் சேர்க்கைக்கு அதிகம் உதவுகிறது. கொம்புத் தேனீக்கள் வளர்ப்பதற்கு ஏற்றவை அல்ல. இவை இடம்விட்டு இடம் பெயரும் தன்மை கொண்டவை. இதன் மூலம் வருடத்திற்கு குறைந்த அளவாக ½ கிலோ தேன் மட்டும் கிடைக்கும்.

இந்திய தேனீக்கள் பெட்டிகளில் வளர்க்கத்தக்க தேனீக்கள். இவை இடம் விட்டு இடம் பெயரும் தன்மையற்றது. இவற்றின் மூலம் வருடத்துக்கு 5 முதல் 10 கிலோ தேன் கிடைக்கும். இத்தாலிய தேனீக்கள், இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இவை பெட்டிகளில் வளர்க்கத்தக்க தேனீக்கள்.

எனவே மாவட்டத்தில் தேனீ வளர்ப்பதில் ஆர்வமுள்ள விவசாயிகள், தேனீக்கள் வளர்க்க முன்வரலாம். அவர்களுக்கு தேனீ வளர்க்க முழு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கான பெட்டிகளும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்