ரெயில்வேயை தனியார்மயமாக்க விடமாட்டோம் - மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி

ரெயில்வேயை தனியார்மயமாக்க விடமாட்டோம் என மாணிக்கம்தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2019-10-13 23:00 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் ஆய்வு செய்தார். அப்போது அவர் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பயணிகள், திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்ய வேண்டும், நவீன கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும், முதியோர் மற்றும் குழந்தைகள் ரெயிலை விட்டு இறங்குவதற்கு வசதியாக பிளாட்பாரம் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது மாணிக்கம் தாகூர், கோரிக்கைகள் தொடர்பாக ெரயில்வே துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

மதுரை ெரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக முக்கிய ரெயில் நிலையமாக திருப்பரங்குன்றம் உருவாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள், விருந்தினர் இருக்கைகள், பயணிகளின் உடைமைகள் வைக்கும் அறை உள்பட பல்வேறு அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்து வருகிற ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தில் நடை மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இரட்டை ரெயில் பாதை பணி முடிந்ததும் அனைத்து ெரயில்களும் திருப்பரங்குன்றத்தில் நின்று செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பல் துறை தனியார்மயமாக்கப்பட்டது. அதேபோல் ஏழை-எளிய மக்கள் பயணிக்க கூடிய ரெயில்வே துறையையும் தனியார்மயமாக்குவதே மத்திய அரசின் திட்டமாக உள்ளது. அதனை தனியார்மயமாக்க விடமாட்டோம். மக்களுக்கு பொது துறையாகவே ரெயில்வே செயல்பட காங்கிரஸ் தலைமை முனைப்புடன் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்