மலிவான அரசியலுக்கு காமராஜர் பெயரை பயன்படுத்துவதா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-12 23:41 GMT
சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காமராஜர் உடலை சென்னை கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் கோரியதை அன்றைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி மறுத்துவிட்டதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பதை வன்மையாக மறுக்கிறேன், கண்டிக்கிறேன். கருணாநிதி  பரிந்துரையின்பேரில், அப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் ராஜாராம் நாயுடு, திண்டிவனம் ராமமூர்த்தி, நெடுமாறன் ஆகியோரின் ஒப்புதலோடுதான் கிண்டியில் காமராஜர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை கடற்கரை சாலையில் காமராஜர் உடலை அடக்கம் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் எவரும் கோரவில்லை.

உண்மைக்கு புறம்பான, தவறான தகவல்களை ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். தமிழக அரசியலில் ஒரு மிகச் சிறந்த காமெடியனாக, அரசியல் கோமாளியாக ராஜேந்திர பாலாஜி பேசி வருகிறார். காமராஜரின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அ.தி.மு.க.வினருக்கு தகுதியில்லை. தோல்வி பயத்தில் உள்ள அ.தி.மு.க.வினர், காமராஜரின் பெயரை பயன்படுத்தி நாங்குநேரி சட்டசபை தொகுதி மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று விடலாம் என்று நினைப்பது வெறும் பகல் கனவாகத் தான் முடியும். இனியும் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் மலிவான அரசியலுக்கு காமராஜர் பெயரை பயன்படுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்