சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அதிகாரிகள் நடவடிக்கை

சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட தொழிற்சாலைக்கு நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

Update: 2019-10-12 23:34 GMT
பூந்தமல்லி,

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வானகரம் சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி சாலைகளில் வழிந்தோடும் நிலை இருந்து வருகிறது. தற்போது மழைபெய்யாத நேரத்தில், தண்ணீர் எப்படி வருகிறது என அதிகாரிகள் சோதனை செய்தபோது, அந்த பகுதியில் இயங்கிவந்த தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது குழாய் மூலம் மழைநீர் கால்வாயில் இணைப்பு கொடுத்து, மோட்டார் மூலம் சாலைகளில் கழிவுநீரை வெளியேற்றியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சுகாதாரமற்ற முறையில் தொழிற்சாலை செயல்பட்டுவந்தது தெரியவந்தது. மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்ததும் உறுதியானது. இதன் காரணமாக தொழிற்சாலைக்கு அதிகாரிகள் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர். இதைத்தொடர்ந்து கழிவுநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, அபராத தொகைக்கான நோட்டீசை தொழிற்சாலை நிர்வாகத்திடம் அளித்தனர். அவர்கள் வாங்க மறுத்ததையடுத்து, அதிகாரிகள் தொழிற்சாலை கதவில் நோட்டீசை ஒட்டிவிட்டு புறப்பட்டனர். மேலும் தொழிற்சாலை மீது பொதுசுகாதார சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்