மெரின்லைனில் மனைவி கத்தியால் குத்தி கொலை 5-வது மாடியில் இருந்து குதித்து வியாபாரி தற்கொலை

மனைவியை கத்தியால் குத்தி கொன்று 5-வது மாடியில் இருந்து குதித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-10-12 22:58 GMT
மும்பை,

மும்பை மெரின்லைன் அருகே உள்ள சிராபஜார் மகேந்திர மன்சன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆனந்த் மக்கிஜா (வயது60). இவர் செம்பூரில் எலக்ட்ரானிக் ஏஜென்சி வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா (55).

சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஆனந்த் மக்கிஜா ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடப்பதாக எல்.டி மார்க் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதற்கிடையே போலீசார் அந்த கட்டிடத்தின் 5-வது மாடியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு கவிதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் போலீசார் ஏதும் கடிதம் உள்ளதா என சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் சிக்காததால் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் ஆனந்த் மக்கிஜா தனது மனைவி கவிதாவை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு 5-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. மேலும் அவர் மனைவியை கொலை செய்ய காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்