வடகிழக்கு பருவமழையால் 36 இடங்கள் பாதிக்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் 36 இடங்கள் பாதிக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-10-12 23:00 GMT
தூத்துக்குடி,

வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது முதல்நிலை பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசும்போது கூறியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, வெள்ளத்தினால் 4 இடங்கள் மிக அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதியாகவும், 9 இடங்கள் அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதியாகவும், 11 இடங்கள் ஓரளவு பாதிப்பு ஏற்படும் பகுதியாகவும், 12 இடங்கள் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படும் பகுதியாகவும் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 36 இடங்கள் வடகிழக்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த இடங்களில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களை கொண்டு 36 மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.

மண்டல அளவிலான குழுக்கள் வாட்ஸ்-அப் குரூப் தொடங்கி அதன் மூலம் தகவல் பரிமாற்றத்தினை மேற்கொள்ள வேண்டும். மேலும், குழுவில் உள்ள நபர்கள் முதல் நிலை பொறுப்பாளர்களுடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும். மண்டல அளவிலான குழுவினர்கள் மற்றும் முதல் நிலை பொறுப்பாளர்கள் மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்படும் இடங்களின் வரைபடத்தினை வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வரைபடத்தில் இயற்கை பாதிப்பு ஏற்படும்போது எவ்வாறு மாற்று வழி மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது என்பதை நேரில் ஆய்வு செய்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளதா என்பதை மண்டல குழுவினர் ஆய்வு செய்து பழுதுகள் இருந்தால் உடனடியாக சரிசெய்திட வேண்டும். மழையினால் மின்சாரம் துண்டிக்கப்படும் போது நிவாரண முகாம்களில் தங்கும் மக்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தும் வகையில் ஜெனரேட்டர் வைக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக பயன்படுத்தும் கட்டிடங்களான அங்கன்வாடி மையம், பயணிகள் நிழற்குடை, நூலகம் உள்ளிட்ட கட்டிடங்களின் உறுதி தன்மையை பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும்.

பேரிடர் மேலாண்மை ஏற்படும்போது அதில் இருந்து மீட்டு எடுக்கும் கால்நடைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு இடங்களை முன்கூட்டியே ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் நிலை பொறுப்பாளராக 1,080 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். முதல் நிலை பொறுப்பாளர்கள் பல்வேறு பேரிடர் மீட்டு பணியில் ஈடுபட தயார் நிலையில் இருக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது அனைத்து அலுவலர்களும் முதல் நிலை பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் வெள்ளம் ஏற்படும்போது அதில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்பது குறித்து முதல் பொறுப்பாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். தொடர்ந்து அவர் பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் எந்திரங்களை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வி‌‌ஷ்ணு சந்திரன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜித்சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, உதவி கலெக்டர்கள் விஜயா (கோவில்பட்டி), தனப்ரியா (திருச்செந்தூர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்