கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்

கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக்கட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-10-12 13:30 GMT
கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறையை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 35). விவசாயி. இவருக்கும், மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரை சேர்ந்த ஜெனிபர் என்ற ஈஸ்வரி (31) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கொடைக்கானல் அருகே கும்பூர்வயல் என்ற இடத்தில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வினோத்குமார் விவசாயம் செய்து வந்தார். இதற்காக அவர் தனது மனைவியுடன் அங்குள்ள வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முற்றத்தில் ஜெனிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு வினோத்குமார் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் ஜெனிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெனிபரின் சாவில் சந்தேகம் ஏற்பட்டதால் வினோத்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மனைவி துணி துவைக்கும் போது தவறி விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இருந்தபோதிலும் வினோத்குமாரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து துருவி, துருவி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், கள்ளக்காதலியுடன் சேர்ந்து தனது மனைவியை தீர்த்துக் கட்டியதாக ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் கூறியதாவது:-

கொடைக்கானல் கும்பூர்வயல் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வினோத்குமார் விவசாயம் செய்து வந்துள்ளார். இதற்கிடையே தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்த அத்தை மகள் வேளாங்கண்ணியுடன் (35), வினோத்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேளாங்கண்ணியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.

இதனால் வேளாங்கண்ணிக்கும், வினோத்குமாருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தனியாக குடித்தனம் நடத்த முடிவு செய்தனர். இதுகுறித்து ஜெனிபருக்கு தெரியவரவே வினோத்குமாரை கண்டித்துள்ளார். ஆனால் வேளாங்கண்ணியுடனான பழக்கத்தை வினோத்குமார் கைவிடவில்லை.

கள்ளக்காதலுக்கு ஜெனிபர் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்து விட்டு வேளாங்கண்ணியும், வினோத்குமாரும் தனியாக குடும்பம் நடத்த திட்டமிட்டனர். இதற்காக வேளாங்கண்ணி நேற்று முன்தினம் மாலையில் கும்பூர்வயலுக்கு வந்தார். பின்னர் அவர், தனியாக இருந்த ஜெனிபரிடம் தகராறு செய்தார்.

அப்போது வினோத்குமார் ஜெனிபரின் கை,கால்களையும் பிடித்து கொண்டார். மேலும் வேளாங்கண்ணி, ஜெனிபரின் வாய், மூக்கை பொத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறி வாயில் ரத்தம் வழிந்து சம்பவ இடத்திலேயே ஜெனிபர் பரிதாபமாக இறந்தார். பின்னர் இருவரும் கொலையை மறைப்பதற்காக வீட்டின் முற்றத்தில் உள்ள துணி துவைக்கும் இடத்தில் ஜெனிபரின் உடலை போட்டுவிட்டு தப்பி சென்றனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெருமாள்மலை அருகே உள்ள கம்பம் நடராஜன் நகர் பகுதியில் பதுங்கி இருந்த வேளாங்கண்ணியையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வினோத்குமார் ஏற்கனவே 2013-ம் ஆண்டு கொடைக்கானலை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்