ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்வது நிறுத்தம் - கடைசி ரெயில் புறப்பட்டு சென்றது

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடைசி ரெயில் நேற்று புறப்பட்டு சென்றது.

Update: 2019-10-08 22:15 GMT
ஜோலார்பேட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான திட்டத்தை அறிவித்தார். அதன்படி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ரெயில் வேகன்கள் மூலம் சென்னைக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது.

பின்னர் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி சென்னை நகர மக்களுக்கு ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்கள் கொண்ட ரெயில் 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் சென்றது. அன்று முதல் ஜூலை 23-ந் தேதி வரை சென்னை நகர மக்களுக்கு தினமும் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் வீதம் 2 கோடியே 75 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஜூலை 23-ந் தேதி முதல் 2-வது ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில்கள் மூலம் சென்னைக்கு தினமும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் ஆந்திராவில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கிரு‌‌ஷ்ணா நதிநீர் சென்னைக்கு வருகிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பதால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை வில்லிவாக்கம் வரை ரெயில் மூலம் குடிநீர் எடுத்து செல்லும் ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 9.40 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துக்கொண்டு கடைசி ரெயில் புறப்பட்டு சென்றது.

இதன் மூலம் சென்னை நகர மக்களுக்கு கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி முதல் நேற்று காலை வரை 79 நாட்கள் தொடர்ந்து 159 முறை குடிநீர் ரெயில் புறப்பட்டது. இதனால் சென்னை நகர மக்களுக்கு 39¾ கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குடிநீர் எடுத்து செல்லும் பணியை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் கோவை அன்பு மேற்பார்வையில் தினமும் 90 ஒப்பந்த ஊழியர்கள் 3 ‘‌ஷிப்ட்’ முறையில் பணிகளை மேற்கொண்டு தண்ணீர் நிரப்பி அனுப்பி வைத்தனர்.

ரெயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் ஒத்துழைப்புடன் சென்னை நகர மக்களுக்கு எந்தவித அசம்பாவிதம் மற்றும் எந்தவித பிரச்சினையும் இன்றி ரெயில் மூலம் குடிநீர் எடுத்து செல்லப்பட்டது. இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில இருந்து் மீண்டும் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் எடுத்து செல்லும் பணி மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் யார்டில் உள்ள குழாய்கள் மட்டும் அகற்றப்படுவதாகவும், மீதமுள்ள ராட்சத குழாய்கள் உள்ளிட்ட நீர் ஏற்றும் மோட்டார் உள்ளிட்டவைகள் அப்படியே இருக்கும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்