தென்திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
தென்திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.;
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி திருமலையில் பிரசித்தி பெற்ற வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 29-ந் தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து கொடியேற்றம், பெரிய, சின்ன சேஷ வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், முத்து பந்தல் வாகனம், கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம், கருட சேவை, அனுமந்த வாகனம், கஜ வாகனம், சூரியபிரபை வாகனம், சந்திர பிரபை வாகனம் மற்றும் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி- பூதேவியுடன் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் பூஞ்சோலையில் மலர்ந்து மணம் வீசும் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலையப்பசுவாமி சுவாமி ஸ்ரீதேவி- பூதேவியுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.
இதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கேரள சிங்காரி மேள தாளத்திற்கு ஏற்ப 2 வெள்ளை குதிரைகள் நடனமாடி செல்ல, நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க, கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருத்தேரில் எழுந்தருளிய மலையப்பசுவாமி ஸ்ரீதேவி-பூதேவியுடன் மாடவீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கேரள மாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.