கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவி மீது தாக்குதல் - 3 மாணவர்கள் மீது போலீசில் புகார்
கோவை புலியகுளத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவியை தாக்கிய 3 மாணவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பீளமேடு,
கோவை புலியகுளத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவியை அவருடன் படிக்கும் சக மாணவர்கள் சரமாரியாக தாக்கியதில் மாணவியின் முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மாணவியின் தந்தை கோகுல்ராஜ் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய மகள், புலியகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவள், சாரணர் பிரிவுக்கு தலைவராக உள்ளாள். பள்ளியில் சாரணர் பயிற்சி வகுப்பில் 3 மாணவர்கள் பேனாவை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த ஆசிரியை, மாணவர்களிடம் இருந்து பேனாவை வாங்கி விட்டு அமைதியாக இருக்க சொல்லுமாறு எனது மகளிடம் கூறியுள்ளார். அதன்படி என்னுடைய மகளும், அந்த மாணவர்களிடம் பேனாவை வாங்கி ஆசிரியையிடம் கொடுத்தாள்.
இந்த நிலையில் ஆசிரியை வெளியில் சென்ற பிறகு, அந்த 3 மாணவர்களும் சேர்ந்து என் மகளை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவளுக்கு முகம் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். அங்கு டாக்டர்கள் எனது மகளுக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர். கண்பார்வையும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட 3 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது..
இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் சி.எஸ்.ஆர்.(சமுதாய பணி பதிவேடு) ரசீது வழங்கி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளி முதல்வர் கூறுகையில், மாணவி தாக்கப்பட்டது குறித்து புகார் வந்துள்ளது. இது குறித்து சிறப்பு கமிட்டி விசாரணை நடத்துகிறது. மாணவியை தாக்கிய மாணவர்களின் பெற்றோரையும் விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளோம். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.