வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம் - தொழிலாளர்கள் பீதி

வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளார்கள்.

Update: 2019-10-08 22:30 GMT
வால்பாறை,

வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட தாய்முடி, பன்னிமேடு, வாகமலை, சங்கிலிரோடு, தோனிமுடி ஆகிய எஸ்டேட் பகுதிகளை ஓட்டிய வனப்பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு உள்ளன.

இந்த காட்டுயானைகள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதிகளை விட்டு வெளியே வந்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளையும், தோட்ட அலுவலகங்களையும், ரே‌‌ஷன் கடைகளையும் உடைத்து சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பட்டப்பகலில் கெஜமுடி எஸ்டேட் மூன்றாவது பிரிவு தேயிலைத் தோட்ட பகுதியில் இரண்டு குட்டிகள் உள்பட 10 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு உள்ளது. இந்த யானைகள் கூட்டம் அங்கிருந்த தண்ணீர் தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு தொடர்ந்து தேயிலைத் தோட்ட பகுதியை சுற்றி உலா வருகின்றன. இதன்காரணமாக தேயிலை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதேபோல் தேயிலை இலை பறிக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டன.இதன்காரணமாக அந்த பகுதியில் பணிபுரிந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை பாதுகாப்பு நலன் கருதி தோட்ட மேற்பார்வையாளர்கள் ஒவ்வொரு இடமாக மாற்றி தேயிலை இலை பறிக்கும் பணியை மேற்கொள்ளச் செய்தனர். எனினும் தொழிலாளர்கள் முழுமையாக தேயிலை இலை பறிக்கும் பணியை மேற்கொள்ள முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.

இதில் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ஓரு சில இளைஞர்கள் கல்லால் அடித்தும் பட்டாசுகளை வெடிக்கச் செய்தும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் காட்டுக்குள் போகாமலேயே அந்தப்பகுதியில் சுற்றித்திரிகிறது. இதனால் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடுகாட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்