வாக்காளர் பட்டியல் விவரங்களை பொதுமக்கள் சரி பார்க்கலாம் - திருவாடானை தாசில்தார் தகவல்

திருவாடானை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்துக்கொள்ளலாம் என தாசில்தார் சேகர் வேண்டு கோள் விடுத்துள்ளார். திருவாடானை தாசில்தார் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2019-10-08 22:30 GMT
தொண்டி,

திருவாடானை தாலுகாவில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரத்து 700 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 54,670 ஆண் வாக்காளர்களும், 53,030 பெண் வாக்காளர்களும் உள்ளனர். ஒவ்வொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது விவரங்களை சரி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி நிலைய எல்லைக்கு உட்பட்ட நிலை அலுவலர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம், தனிநபர் புகைப்படம் உள்ள மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டைகள் போன்ற ஆவணங்களில் ஒன்றை அவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இதுதவிர சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கலாம்.

வாக்காளர்களே தங்களது செல்போன்களில் வாக்காளர் உதவி மையம் எனும் ஆன்லைனில் உள்ள செயலியை பதிவிறக்கம் செய்து அதில் வாக்காளர் விவரங்களான பிறந்த தேதி, வயது, புகைப்படம், முகவரி, உறவுமுறை, செல்போன் எண் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு உடனடியாக வாக்காளர் பட்டியலில் தங்களது விவரங்களை சரி செய்து கொள்ள வேண்டும். இதுவரை திருவாடானை தாலுகாவில் 18 ஆயிரம் வாக்காளர்களுக்கு மட்டுமே வாக்காளர் பட்டியலில் விவரங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி தாலுகாவில் இரவு, பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தன்னார்வ தொண்டர்கள் மூலம் தாலுகா அலுவலகத்தில் இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்