பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் ஒரு வாரத்திற்கு பிறகு கடலுக்கு சென்றனர்
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த பாம்பன் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர்.
ராமேசுவரம்,
பாம்பனில் உள்ள இரும்பாலான மீன்பிடி விசைப்படகுகளுக்கு அரசு சார்பில் மானிய டீசல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விசைப்படகு மீனவர்களும் கடந்த 1-ந்தேதி முதல் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 100 விசைப்படகுகள் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்களுடன் மீன்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இரும்பாலான விசைப்படகுகளுக்கு மானிய டீசல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மீன்துறை துணை இயக்குனர் மூலம் அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும், இதுகுறித்து அரசு தான் முடிவு எடுக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
அரசு அனுமதி வழங்கினால் அந்த படகுகளுக்கும் மானிய டீசல் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முதல் வழக்கம் போல மீன்பிடிக்க சென்றனர்.
தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 100 விசைப் படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.