ரெயில்வே அதிகாரி வீட்டில் 33¾ பவுன் நகைகள் கொள்ளை
மதுரையில் ரெயில்வே அதிகாரி வீட்டில் இருந்த 33¾ பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
மதுரை,
மதுரை கூடல்நகர், சொக்கலிங்க நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் கீதாராஜன்(வயது 57). இவர் மதுரை ரெயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று கீதாராஜன் வீட்டை பூட்டி வி்ட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இதனால் வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 33¾ பவுன் தங்க நகைகள், 2 ஜோடி வைர தோடுகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இந்தநிலையில் வீட்டிற்கு வந்த கீதாராஜன், வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. உடனே அவர் இது குறித்து கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சம்பவம் நடந்து வீட்டிற்கு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான கைரேகை, தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.