ஊட்டி தங்கும் விடுதியில் குளிர் காய நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய மூதாட்டி மூச்சுத்திணறி சாவு
ஊட்டி தங்கும் விடுதியில் குளிர் காய நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய மூதாட்டி மூச்சுத்திணறி உயிரிழந்தார். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.;
ஊட்டி,
ஊட்டி வண்டிச்சோலை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கூடலூர் நியூஹோப் பகுதியை சேர்ந்த விஜயா(வயது 65), ஓவேலியை சேர்ந்த சாலிமேரி(60) ஆகிய 2 பேரும் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். அவர்கள் தங்கி இருந்து வேலை செய்ததால், விடுதியையொட்டி உள்ள அறை ஒன்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு விஜயா, சாலிமேரி ஆகிய 2 பேரும் தங்களது வேலையை முடித்துவிட்டு அறைக்கு சென்று தங்கினர்.
பின்னர் மறுநாள் காலையில் அவர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் விடுதியில் பணிபுரியும் மற்ற பணியாளர்கள் அந்த அறைக்கு சென்று கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயா, சாலிமேரி மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஊட்டி நகர மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரையும் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயா ஏற்கனவே இறந்து விட்டதாகவும், சாலிமேரி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சாலிமேரி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
குளிர் காய அறையின் கதவை பூட்டி கொண்டு நெருப்பு மூட்டி 2 பேரும் தூங்கி உள்ளனர். அறையில் இருந்து புகை வெளியே செல்ல முடியாத காரணத்தால் மூச்சுத்திணறி விஜயா இறந்து உள்ளார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கியவர்களில் 7 பேர், கரி அடுப்பில் நெருப்பு மூட்டி உறங்கியதால் மூச்சுத்திணறி இறந்தனர். இதனால் ஓட்டல்கள், காட்டேஜ்களில் உள்ள அறைகளில் நெருப்பு மூட்டக்கூடாது. இருந்தாலும், இது கடைப்பிடிக்கப்படுவது இல்லை. அதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.