வழிப்பறி செய்வதற்காக கனகன் ஏரியில் பதுங்கியிருந்த 4 வாலிபர்கள் கைது

வழிப்பறி செய்யும் நோக்கில் கனகன் ஏரி பகுதியில் பதுங்கியிருந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-10-06 23:15 GMT
புதுச்சேரி,

புதுவை திலாஸ்பேட்டை கனகன் ஏரி பகுதியில் 5 வாலிபர்கள் முகமூடி அணிந்து கையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், திருமுருகன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அங்கிருந்த வாலிபர்கள் போலீசாரை கண்டவுடன் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். இதில் 4 பேர் பிடிபட்டனர். ஒருவன் தப்பிச்சென்றான். பிடிபட்டவர்களிடம் இருந்து 2 கத்திகள், மிளகாய் பொடி பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ஜீவானந்தபுரத்தை சேர்ந்த ராமு என்ற ராம் குமார் (வயது 20), தர்மா என்ற தர்மதுரை (20), குண்டுபாளையத்தை சேர்ந்த விக்கி (22), பேட்டை சத்திரத்தை சேர்ந்த சங்கர் (23) என்பதும், தப்பி ஓடியவர் பிரசாந்த் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் செலவுக்கு பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட முயன்றுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய பிரசாந்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்