திருமங்கலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஆசிரியை பலி - கணவர், குழந்தைகள் கண்முன் பரிதாபம்
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவர், குழந்தைகள் கண்முன் ஆசிரியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.;
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி(வயது 36). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி அமுதா(30). இவர் சித்தாலை கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மோனிஷா(12), சாதனா(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு சுந்தரபாண்டி, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகைக்காக துணி மணிகள் எடுப்பதற்காக மதுரைக்கு சென்றார். முன்னதாக அவர்கள் திருமங்கலம் வரை மோட்டார் சைக்கிளில் சென்று, பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் மதுரைக்கு சென்றனர். பின்னர் துணிமணிகள் எடுத்துவிட்டு அவர்கள் நள்ளிரவு திருமங்கலம் வந்தனர். அங்கிருந்து சாத்தங்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
திருமங்கலம் அருகே மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் செங்குளம் பகுதியில் சுந்தரபாண்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சுந்தரபாண்டி, அவரது மனைவி அமுதா மற்றும் குழந்தைகள் ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அமுதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இதற்கிடையே படுகாயமடைந்த சுந்தரபாண்டியையும், குழந்தைகளையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரித்து வருகின்றனர். கணவர், குழந்தைகள் கண்முன்னே ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.