காற்று வெளியேற முடியாதவாறு பூட்டி இருந்தனர்: வீட்டின் கதவுகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு

காற்று வெளியேற முடியாத வகையில் வீட்டின் வாசல் கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகளை பூட்டி வைத்து இருந்ததால் அழுத்தம் காரணமாக வீட்டின் கதவுகள் வெடித்து சிதறியது.

Update: 2019-10-06 22:22 GMT
ஆலந்தூர்,

சென்னை கிண்டி நேருநகர் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). நேற்று மாலை இவர், தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு மருமகள், பேரன் ஆகியோருடன் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். உள்அறையில் ஏ.சி. போட்டு இருந்ததால் அந்த அறை கதவும் மூடி இருந்தது.

இந்த நிலையில் திடீரென வீட்டின் முன்பக்க வாசல் கதவு, படுக்கை அறை கதவு மற்றும் சமையல் அறை கதவுகள் வெடித்து சிதறின. இதை கண்டதும் மாரிமுத்து, அவருடைய மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் அலறியடித்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்து ஆசுவாசப்படுத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி உதவி கமிஷனர் சுப்புராயன், இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் வந்து விசாரித்தனர். நல்லவேளையாக இதில் வீட்டில் இருந்த 3 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் கதவுகள் மட்டும் வெடித்து இருப்பது தெரிந்தது. இதற்கான காரணம் குறித்து அறிவதற்காக தடயவியல் துறை துணை இயக்குனர் ஷோபியா ஜோசப் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

அதில், ஆவி பிடிப்பதற்காக கியாஸ் அடுப்பில் பாத்திரத்தில் வெந்நீர் சுட வைத்து உள்ளனர். 20 நிமிடங்களுக்கு மேலாக தண்ணீர் கொதித்து கொண்டே இருந்ததால் தண்ணீர் பொங்கி பாத்திரத்தில் இருந்து வெளியே வந்து விழுந்ததால் கியாஸ் அடுப்பு அணைந்துவிட்டது.

இதனால் அடுப்பில் இருந்து கியாஸ் வெளியேறி சமையல் அறை முழுவதும் பரவியது. வீட்டின் சமையல் அறை, படுக்கை அறை, வாசல் கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகள் அனைத்தும் காற்று வெளியேற முடியாத அளவுக்கு பூட்டி இருந்ததால் கியாஸ் வெளியேற முடியாமல், கொதிக்கும் வெந்நீரால் ஏற்பட்ட நீராவியுடன் கலந்து அழுத்தம் காரணமாக இந்த கதவுகள் வெடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்