மும்பையில் இருந்து வெளிநாட்டிற்கு 87 கிலோ சந்தன மரத்துண்டுகளை கடத்த முயன்ற 2 பேர் கைது

மும்பையில் இருந்து வெளிநாட்டிற்கு 87 கிலோ சந்தன மரத்துண்டுகளை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-10-06 22:30 GMT
மும்பை, 

மும்பையில் இருந்து வெளிநாட்டிற்கு 87 கிலோ சந்தன மரத்துண்டுகளை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகள் சோதனை

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பிரேசில் நாட்டிற்கு செல்லும் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் செல்லும் பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒருவரது உடைமையில் சந்தேகப்படும் படியான பார்சல் இருந்ததால் அதனை வீரர்கள் பிரித்து பார்த்தனர். இதில் 77 கிலோ எடை கொண்ட சந்தன மரக்கட்டைகளின் துண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை பறிமுதல் செய்த பாதுகாப்பு படைவீரர்கள் சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சந்தனமரத்துண்டுகள் பறிமுதல்

இதன்படி அதிகாரிகள் அங்கு வந்து சந்தன மரத்துண்டுகள் கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் சூடான் நாட்டை சேர்ந்த முகமது அப்டெல்ரகீம் என்பது தெரியவந்தது. இதே போல அதிகாலை 3.45 மணி அளவில் வெளிநாடு செல்லும் விமானத்தில் ஏற முயன்ற பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது சூடான் நாட்டை சேர்ந்த எல்மோசிஸ் ஒஸ்மான் என்ற பயணி தனது உடைமைகளில் வைத்திருந்த 10 கிலோ சந்தன மரத்துண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவரையும் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட 87 கிலோ சந்தன மரத்துண்டுகள் எங்கிருந்து கடத்தி கொண்டுவரப்பட்டது என்பது குறித்து பிடிபட்டவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்