திருவண்ணாமலையில் ஆயுத பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது - போக்குவரத்து நெரிசல்
திருவண்ணாமலையில் ஆயுத பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
நவராத்திரி விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. 9-வது நாளான இன்று (திங்கட்கிழமை) ஆயுத பூஜையும், நாளை (செவ்வாய்க்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொருவரும் தங்களது தொழில் மேம்படவும், வாழ்க்கை உயர்வு அடையவும் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்லது ஆயுதங்களை இறைபொருளாக கருதி வணங்குவது ஆயுத பூஜையாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் முன் கூட்டியே ஆயுத பூஜையை கொண்டாடினர்.
ஆயுத பூஜையான இன்று வீடு, கடை, நிறுவனங்களில் சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள். தங்களின் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை சுத்தம் செய்து, அதனை அலங்கரித்து, மாலை, குங்குமம், சந்தனம் இட்டு பூஜை செய்வார்கள். பூஜையின் போது பொரி, பழம், இனிப்பு உள்ளிட்டவற்றை வைத்து வழிபடுவார்கள்.
பூஜை முடிந்தவுடன் பூசணிக்காய் உடைப்பது வழக்கம். இதற்காக வெளிமாநிலங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பூசணிக்காய்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தேரடி வீதி, சின்னக்கடை தெரு, திருவூடல் தெரு, போளூர் சாலை, செங்கம் சாலைகளில் விற்பனைக்காக பூசணிக்காய்கள் குவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் ரூ.30 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை பூசணிக்காய்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொரி, வாழைப்பழம், பூ வகைகள், பழ வகைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை உழவர்சந்தை, பெரிய மார்க்கெட், தேரடி வீதி போன்ற பகுதிகளின் சாலையோரம் ஆயுத பூஜை பொருட்கள் போன்றவற்றை வாங்க பொதுமக்கள் அதிகமாக வந்தனர். இதனால் நகரின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
பொதுமக்கள் அதிகமாக வந்ததால் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
தொடர் விடுமுறை காரணமாக நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.