அமைச்சரின் தங்கை மகன் தூக்குப்போட்டு தற்கொலை - திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனத்தில் அமைச்சரின் தங்கை மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-10-06 23:15 GMT
திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டையன் தெருவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வீடு உள்ளது. இங்கு அமைச்சரின் குடும்பத்துடன் அவரது தங்கையான வள்ளியின் மகன் லோகேஷ்குமார் (வயது 26) என்பவரும் வசித்து வந்தார். என்ஜினீயரான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு மாடியில் உள்ள ஒரு அறைக்கு தூங்க சென்றார். இந்த நிலையில் நேற்று நீண்ட நேரம் ஆன பின்பும் அவர் எழுந்து வரவில்லை.

இதையடுத்து அவரை தேடி உறவினர்கள் சென்ற னர். அங்கு அறைக்கதவை நீண்ட நேரம் தட்டியும், அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் உடனே திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு லோகேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

தொடர்ந்து போலீசார், லோகேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் லோகேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் வீட்டில் அவரது தங்கை மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்