கச்சிராயப்பாளையம் அருகே, மரத்தில் கார் மோதல்; வக்கீல் பலி - 3 பேர் படுகாயம்
கச்சிராயப்பாளையம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் வக்கீல் பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40) வக்கீல். நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த ஜெயபால், செம்படாக்குறிச்சி சங்கர், மட்டிகைக்குறிச்சி ராஜாராம் ஆகியோருடன் சொந்தவேலை காரணமாக காரில் கடலூருக்கு சென்றார்.
பின்னர் அங்கு வேலை முடிந்ததும் அதே காரில் அவர்கள் அக்கராயப்பாளையம் திரும்பினர். காரை ஜெயபால் ஓட்டினார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கச்சிராயப்பாளையம் அருகே குதிரைசந்தல் கிராம பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக கார் ஜெயபாலின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது.
இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே தேவராஜ் பரிதாபமாக இறந்தார். ஜெயபால், சங்கர், ராஜாராம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சங்கர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.