திண்டிவனம் அருகே, திருடிய செல்போன்களை கொடுக்க அங்கன்வாடி ஊழியரிடம் பேரம் பேசிய வாலிபர் - ‘வாட்ஸ்-அப்’பில் வைரலாகிறது

திண்டிவனம் அருகே திருடிய செல்போன்களை திருப்பி கொடுக்க அங்கன்வாடி ஊழியரிடம் வாலிபர் ஒருவர் பேரம் பேசிய சம்பவம் ‘வாட்ஸ்அப்’பில் வைரல் ஆகி வருகிறது.;

Update: 2019-10-06 22:15 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள அண்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி நளினி(வயது 35). இவர் அதேபகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு நளினி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. வீட்டில் வைத்திருந்த ரூ.17 ஆயிரத்து 500 மற்றும் அரசு சார்பில் வழங்கப்பட்ட செல்போன் உள்பட 3 செல்போன்களை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் யாரோ? வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாளை நெம்பி திறந்து உள்ளே புகுந்து பணம் மற்றும் 3 செல்போன்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் நளினி திருடுபோன செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், தன்னிடம் உங்களுக்கு சொந்தமான 3 செல்போன்கள் உள்ளது. ரூ.7 ஆயிரம் கொடுத்தால், அவற்றை உங்களிடம் கொடுத்து விடுவேன் என்று பேரம் பேசியுள்ளார். அதற்கு நளினி, ரூ.5 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். இதனை ஏற்ற அந்த நபர் இரவு நேரத்தில், தான் வரச்சொல்லும் இடத்துக்கு தனியாக வந்து பணத்தை கொடுத்து விட்டு, செல்போன்களை பெற்றுச் செல்லுமாறு கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதுபற்றி நளினி, ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பணம், செல்போன்களை திருடியது அதே ஊரை சேர்ந்த அய்யனார்(32) என்பதும், அதனை திரும்ப கொடுக்க பேரம் பேசி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே பணம், செல்போன்களை திருடிச் சென்ற வாலிபர், அதனை பறிகொடுத்த அங்கன்வாடி ஊழியரிடம் செல்போனில் பேரம் பேசிய உரையாடல் ‘வாட்ஸ்-அப்’பில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்