விரிவாக்க பணிகள் தாமதம்: திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இடநெருக்கடியில் சிக்கும் பஸ்கள்

விரிவாக்க பணிகள் தாமதமாகி வருவதால் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இடநெருக்கடியில் பஸ்கள் சிக்குகின்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2019-10-06 22:15 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூர், வடமதுரை, நிலக்கோட்டை, சின்னாளபட்டி போன்ற ஊர்களுக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் இருக்கும். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக வெளியூர் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் உள்ள கடைகள், நடைமேடைகள் அகற்றப்பட்டு விரிவாக்கம் செய்யும் பணி நடந்தது.

அதன் பின்னர் என்ன காரணத்தினாலோ விரிவாக்க பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால் பஸ் நிலைய வளாகத்தில் பஸ்களை நிறுத்தி வைக்க போதிய இடம் கிடைக்காமல் டிரைவர்கள் அவதிப்பட்டனர். மேலும் பஸ்களையும் பஸ் நிலையத்துக்குள் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தி வைக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்வதிலும், வெளியில் இருந்து பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வருவதிலும் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுகிறது.

அப்போது பஸ் நிலையத்துக்குள் நுழைய முடியாமல் பஸ்கள் சாலையில் நீண்ட தூரத்துக்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகள், டிரைவர்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ் நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்