22 பேரூராட்சிகளிலும் அனைவருக்கும் வீடு திட்ட சிறப்பு முகாம்கள் - கலெக்டர் தகவல்
22 பேரூராட்சிகளிலும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி,
இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சி பகுதிகளிலும் பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் அல்லது பட்டாவுடன் சொந்த இடம் வைத்திருந்து வீடு கட்டாதவர்கள் மற்றும் பட்டா வைத்திருந்து சொந்த இடங்களில் தகரவீடு, குடிசை வீடு கட்டி வசித்து வருபவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்பட உள்ளது.
இதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் சிறப்பு முகாம்கள் வருகிற 14-ந்தேதி தொடங்கி, 18-ந்தேதி வரை நடக்கிறது. அதன்படி, பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம், வீரபாண்டி பேரூராட்சிகளில் 14-ந்தேதியும், போ.மீனாட்சிபுரம், மேலச்சொக்கநாதபுரம், குச்சனூர், மார்க்கையன்கோட்டை, தேவாரம் ஆகிய பேரூராட்சிகளில் 15-ந்தேதியும் சிறப்பு முகாம் நடக்கிறது.
16-ந்தேதி உத்தமபாளையம், பண்ணைப்புரம், அனுமந்தன்பட்டி, கோம்பை, காமயகவுண்டன்பட்டி, க.புதுப்பட்டி, ஹைவேவிஸ் ஆகிய பேரூராட்சிகளிலும், 17-ந்தேதி தென்கரை, தாமரைக்குளம், வடுகபட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பேரூராட்சிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. ஆண்டிப்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் 18-ந்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.
எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்கள் அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் நடக்கும் இந்த சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.