ஆயுத பூஜையையொட்டி மார்க்கெட்டில் பூ விலை உயர்வு

வேலூரில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று பொதுமக்கள் திரண்டனர். பூஜையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

Update: 2019-10-06 21:45 GMT
வேலூர், 

ஆயுத பூஜை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையில் தொழிலாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். பொதுமக்களும் தங்கள் வீடுகளில் பூஜை செய்வார்கள்.

ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், சர்க்கரை, இனிப்புகள் வைத்தும், வாழை மரங்கள் கட்டியும், பூமாலை அணிவித்தும், பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள். இதற்காக பொதுமக்கள் ஆயுத பூஜைக்கு தேவையான பூ, பழங்கள் வாங்குவதற்காக நேற்று பஜாருக்கு வந்திருந்தனர்.

வேலூர் மண்டித்தெருவில் ஆயுத பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு நடக்காமல் தடுக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மண்டித்தெருவில் இருசக்கர வாகனங்கள் செல்லமட்டுமே அனுதிக்கப்படுகிறது. ஆட்டோக்கள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை.

ஆயுத பூஜையையொட்டி வேலூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் நேற்று ரூ.1000-க்கு விற்பனையானது. 100 ரூபாயாக இருந்த சாமந்தி ரூ.250-க்கும், ரூ.300-ஆக இருந்த மல்லி, முல்லை ரூ.500-க்கும், ரூ.40-க்கு விற்ற ரோஜா ரூ.150-க்கும், ரூ.100-க்கு விற்ற அரளி ரூ.200-க்கும், ரூ.100-க்கு விற்ற சம்பங்கி ரூ.400-க்கும் விற்பனையானது.

அதேபோன்று பூஜைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பொருளான பொரி ஒரு மூட்டை (6½ கிலோ) ரூ.350-க்கு விற்பனையானது. அதேபோன்று ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.100, ஆப்பிள் ரூ.120, கொய்யா ரூ.80, திராட்சை ரூ.100, ஆரஞ்ச் ரூ.90, மாதுளை ரூ.160-க்கு விற்பனையானது. பூசணிக்காய் ரூ.50 முதல் ரூ.150 வரைக்கும், 2 வாழைக்கன்றுகள் ரூ.40-க்கும் விற்பனையானது.

மேலும் செய்திகள்