மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை
மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை,
அரசு மற்றும் அனைத்து வகைப்பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு, தடுக்கும் முறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பு கைகளை கழுவவேண்டும்.
வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுற்றித் தண்ணீர் தேங்கி இருந்தால் அதுகுறித்து தலைமை ஆசிரியருக்கு மாணவர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் குடிநீர் பானைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்க வேண்டும். இதன் மூலம் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க முடியும்.
தண்ணீர் தேங்குவதால் தான் டெங்கு கொசுக்கள் உருவாகின்றது என்றும், கொசுக்கள் கடிப்பதால்தான் டெங்கு காய்ச்சல் உருவாகின்றது என்றும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்திலும், வீடுகளிலும் தண்ணீர் தேங்கா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொண்டு டெங்கு கொசுக்கள் உருவாகாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு முறைகள் சார்ந்து தலைமை ஆசிரியர், மாணவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்.
நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், சாரண-சாரணியர் இயக்க மாணவர்கள், தேசிய மாணவர் படை, பசுமைப்படை மாணவர்கள் மற்றும் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்களை சுகாதார தூதுவர்களாக நியமித்து பள்ளியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். பள்ளி மற்றும் வீடுகளில் வீணாக தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, எப்போதும் சுகாதாரமான தண்ணீரையே மாணவர்கள் உபயோகிக்க அறிவுறுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தவிர மஞ்சள் காமாலை மற்றும் சுகாதாரமற்ற தண்ணீரினால் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நோய் தடுப்பு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி நோய்க்கான அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
பள்ளிக்கு மாணவர்கள் காய்ச்சலோடு வந்தாலோ, பள்ளிக்கு வந்த பின்பு காய்ச்சல் ஏற்பட்டது என்றாலோ அதை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெளிவுப்படுத்த வேண்டும். அவ்வாறு காய்ச்சல் ஏற்பட்டு பள்ளியில் இருந்தால் அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கோ, பாதுகாவலருக்கோ தெரிவித்த பின்பு மாணவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அழைத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.