புஞ்சைபுளியம்பட்டி அருகே, 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு
புஞ்சைபுளியம்பட்டி அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புதுப்பாளையம் பஞ்சா தோட்டத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி (வயது 75). விவசாயி. இவரது வீட்டையொட்டி அவருக்கு சொந்தமான 60 அடி ஆழ கிணறு உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாத அந்த கிணறு தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் பழனிச்சாமி தூங்கி எழுந்து நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் வெளியே வந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் “அய்யோ, அம்மா” என்று சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற சிலர் அங்கு சென்று பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் இறங்கி கட்டில் கட்டி பழனிசாமியை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
அதன்பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து அதில் ஏற்றி அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த பழனிச்சாமிக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.