சத்தி அருகே, அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை-வெள்ளி கிரீடம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சத்தியமங்கலம் அருகே அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி கிரீடத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே உள்ள செம்படாபாளையம் பவானி ஆற்றின் படித்துறையில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக மாதுவ் உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜையை முடித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை அவர் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார்.
அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க நகையை காணவில்லை. ¾ கிலோ உடைய வெள்ளி கிரீடமும் இல்லை.
நேற்று முன்தினம் இரவு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றதை மர்மநபர்கள் நோட்டமிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்கள். இதையடுத்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க நகை மற்றும் வெள்ளி கிரீடத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பூசாரி சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.