நீர்பிடிப்பு பகுதியில் மழை: குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது. வரட்டுப்பள்ளம் அணை 7 அடி அதிகரித்தது.
டி.என்.பாளையம்,
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த டி.என்.பாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணை 42 அடி உயரம் கொண்டது. அணையின் மூலம் வலது, இடது கரை என 2 ஆயிரத்து 498 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக குன்றி, விளாங்கோம்பை, கம்பனூர் வனப்பகுதி உள்ளது.
இங்கு பெய்யும் மழைநீர் அணைக்கு நீராதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. இதனால் நள்ளிரவு 1 மணியில் இருந்து குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வர தொடங்கியது. முதலில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. பின்பு படிப்படியாக குறைந்து நேற்று காலை நீர்வரத்து 262 கனஅடி வந்தது.
நேற்று முன்தினம் காலை அணையின் நீர்மட்டம் 20 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து நேற்று காலை 6 மணி அளவில் 28 அடியை தொட்டது. ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதேபோல் மழை பெய்தால் விரைவில் அணை நிரம்பி விடும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
கள்ளிப்பட்டியை அடுத்த பெருமுகை அருகே சஞ்சீவராயன் குளம் உள்ளது. இந்த குளம் சமீபத்தில் தூர்வாரப்பட்டது. இந்த நிலையில் கரும்பாறை மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாப்பிள்ளை குண்டு பள்ளம் ஓடை வழியாக குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.
குளத்தை ஒட்டிய மலை பகுதியில் இன்னும் 2 அல்லது 3 நாட்கள் மழை பெய்தால் நீர்வரத்து அதிகரித்து சஞ்சீவிராயன் குளம் நிரப்ப வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதியான கும்பரவாணி பள்ளம், வரட்டுப்பள்ளம், கல்லுப்பள்ளம் ஆகியவற்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு எடுத்து வரட்டுப்பள்ளம் அணைக்கு அதிகமாக தண்ணீர் வந்தது.
இதனால் நேற்று முன்தினம் 11 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 18 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 7 அடி அதிகரித்தது. இதன் மூலம் எண்ணமங்கலம் ஏரி, தாமரைக்கரை ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.