காரைக்குடி அருகே துணிகரம் தபால் அதிகாரி வீட்டில் 132 பவுன் நகை கொள்ளை
காரைக்குடி அருகே தபால் அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 132 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா காதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 60). இவர் தபால் துறையில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினரோடு ராமேசுவரத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார்.
அதன்பின்னர் நேற்றுமுன்தினம் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த 3 அறைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. அறைகளில் இருந்த பீரோக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
அதில் ஒரு பீரோவில் இருந்த 132 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சோமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன், துணை சூப்பிரண்டு அருண் ஆகியோரும் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வீட்டில் கிடைத்த தடயங்களை பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். வீட்டில் ஆள் இல்லாததை நன்றாக நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். எனவே அந்த பகுதியை பற்றி நன்றாக அறிந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சி பதிவுகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
தபால் அதிகாரி வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.