கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கோலாகலம்

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-10-06 22:30 GMT
கரூர்,

கரூர் நகரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முன்னொரு காலத்தில் கரூரை புகழ்சோழ அரசர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சிவகாமி ஆண்டார் என்கிற வயது முதிர்ந்த முனிவர், நந்தவனத்தில் பூக்களை பறித்து கொண்டு பசுபதீஸ்வரருக்கு சாற்றி தினமும் வழிபாடு நடத்தினார். ஒரு நாள் சாமிக்கு சாற்றுவதற்கு பூக்களை எடுத்து வந்த போது, புகழ்சோழரின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்து பிளிறி கொண்டு ஓடியது. அப்போது சிவகாமி ஆண்டாரின் பூக்குடலையை (குடலை என்பது ஓலையால் முடையப்பட்ட கூடை) அந்த யானை தட்டி விட்டது. சிவனுக்கு சாற்ற வேண்டிய பூக்கள் கீழே கொட்டி விட்டதை எண்ணி சிவகோ... சிவகோ... என அந்த முனிவர் கதறினார்.

பட்டத்து யானையை வீழ்த்திய எறிபத்தர்

சிவதொண்டு புரிவதையே எப்போதும் சிந்தையில் வைத்திருக்கும், இலைமலிந்தவேல் நம்பி எறிபத்த நாயனார் இதனை அறிந்தார். பின்னர் உடனடியாக அங்கு சென்று மழு என்கிற ஆயுதத்தால் அந்த யானையையும், பாகருடன் சேர்ந்த அரச வீரர்களையும் வெட்டி கொன்றார். இதனை அறிந்த புகழ் சோழ அரசர் தனது படையுடன் வந்து, நடந்த நிகழ்வை கேட்டு இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்து தன்னையும் வெட்டி கொன்றுவிடுமாறு எறிபத்த நாயனாரிடம் தனது வாளை நீட்டி வேண்டினார். அப்போது சிவபெருமான் உமா மகேஸ்வரியுடன் தோன்றி அனைவருக்கும் காட்சியளித்தார். மேலும் இறந்தவர்களை உயிர்பித்து அருள்பாலித்தார். மகா அஷ்டமி நாளில் நடந்த இந்த வரலாறு தான் எறிபத்த நாயனார் பூக்குடலை விழாவாக கரூரில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது.

பூக்குடலை விழா

அதன்படி மகாஅஷ்டமிநாளான நேற்று எறிபத்த நாயனார் பூக்குடலை விழா, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை நடந்தது. இதையொட்டி எறிபத்த நாயனார், புகழ் சோழர், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சன நீராட்டும், அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது.

கரூர் நகராட்சி அலுவலகம் முன்பு விழாவுக்கான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. யானை வாகனம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. விழா பந்தலில் அங்கு சிவகாமி ஆண்டார் பூக்குடலையுடன் வருதலும், யானை அதனை தட்டிவிடுதலும், யானையின் தும்பிக்கையை வெட்டி வீழ்த்தும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது புகழ்சோழர் அரசர் தனது படையுடன் வந்து, யானையின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து எறிபத்தரிடம் வேண்டுவதும் தத்ரூபமாக நடித்து காட்டி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கான விளக்க உரையினை கருவூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் கூறினார். அப்போது சாமி, அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவீதியுலா நிகழ்ச்சி

அதனை தொடர்ந்து பசுபதீஸ்வரர் அம்பாளுடன் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பூக்குடலையை கையில் குச்சியால் சுமந்தப்படி சென்றனர். பக்தர்களுக்கு வசதியாக கோவில் சார்பில் பூக்குடலைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. மேலும் கடைகளிலும் விற்பனையானது. பக்தர்கள் பூக்களை வாங்கி வந்து அதில் வைத்து கையில் ஏந்தி சென்றனர். ஊர்வலம் மேள, தாளம் முழங்க சென்றது. சிவபக்தர்கள் பலர் நடனமாடிய படியும், சிவ பக்தி பாடல்களை பாடிய படியும் சென்றனர்.

ஊர்வலம் கரூர் அலுவலகம் முன்பு தொடங்கி ஜவகர் பஜார், மனோகரா கார்னர், காமாட்சியம்மன் கோவில், திண்ணப்பா கார்னர், அரசு மருத்துவமனை சாலை வழியாக கோவிலை வந்தடைந்தது. கோவிலில் வைக்கப்பட்டிருந்த பூக்குடலையில் பக்தர்கள் தங்களது இடர்கள் நீங்க வேண்டி கொண்டு வந்த பூக்களை சாற்றினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தன.

மேலும் செய்திகள்