கும்பகோணம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கும்பகோணம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இதில் ரூ.22 லட்சம் தப்பியது.

Update: 2019-10-06 22:45 GMT
திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் மெயின் சாலை பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ஊழியர்கள் பணம் நிரப்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம். மையத்துக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் ஒரு பகுதி திறந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரூ.22 லட்சம் தப்பியது

தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்கள், அதில் பணம் உள்ள பகுதியை திறக்க முடியாமல் திரும்பி சென்றதும், இதனால் அந்த எந்திரத்தில் இருந்த ரூ.22 லட்சம் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியதும் தெரியவந்தது. மேலும் கொள்ளையடிக்க வந்தவர்கள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்து சென்றது தெரியவந்தது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க மர்ம நபர்கள் முயற்சி மேற்கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்