சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு? காங்கிரஸ் தலைவர்களுடன் மதுசூதன் மிஸ்திரி ஆலோசனை
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்குவது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் மதுசூதன் மிஸ்திரி ஆலோசனை நடத்தி தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்குவது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் மதுசூதன் மிஸ்திரி ஆலோசனை நடத்தி தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இந்த ஆட்சி அமைந்து 2 மாதங்களுக்கு மேலாகிவிட்டது.
கர்நாடக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், இன்னும் எதிர்க்கட்சி தலைவரை நியமனம் செய்யவில்லை. கூட்டணி ஆட்சியில் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக சித்தராமையா இருந்தார். அதனால் தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று சித்தராமையா கேட்டுள்ளார். அதே நேரத்தில் அந்த பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.கே.பட்டீல் மற்றும் முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரும் போட்டி போட்டு வருகிறார்கள்.
தனித்தனியாக கருத்து
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, கே.எச்.முனியப்பா, பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்ட சில தலைவர்கள் சித்தராமையாவுக்கு எக்காரணம் கொண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கக்கூடாது என்று கட்சி மேலிடத்திடம் கூறி வருகிறார்கள். இதனால் சித்தராமையாவை எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தயங்கி வருகிறார்.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பதவி, இரு சபைகளின் கொறடா பதவி யாருக்கு வழங்குவது என்பது குறித்து கர்நாடக காங்கிரசின் முன்னணி நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மதுசூதன் மிஸ்திரியை சோனியா காந்தி கர்நாடகத்திற்கு அனுப்பி வைத்தார். அவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு வந்தார். நேற்று மதுசூதன் மிஸ்திரி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முக்கியமான தலைவர்களை தனித்தனியாக அழைத்து கருத்துகளை கேட்டறிந்தார். கர்நாடக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டுமா? என்பது குறித்தும் கருத்து கேட்டறிந்தார்.
சித்தராமையாவுடன் ஆலோசனை
மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வர், கே.எச்.முனியப்பா, எச்.கே.பட்டீல், முன்னாள் சபாநாயகர் கே.பி.கோலிவாட், ஜமீர்அகமதுகான், கிருஷ்ண பைரேகவுடா, ராஜீவ்கவுடா எம்.பி. உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் கருத்துகளை தனித்தனியாக கேட்டறிந்தார். அதன் பிறகு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் மதுசூதன் மிஸ்திரி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் மந்திரி பரமேஸ்வர் நாயக் உள்பட பல்வேறு நிர்வாகிகள், மதுசூதன் மிஸ்திரியை நேரில் சந்தித்து பேச வந்தனர். ஆனால் அதற்கு மதுசூதன் மிஸ்திரி அனுமதி வழங்கவில்லை. ஏற்கனவே தயாரித்த பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தவர்களை மட்டுமே சந்தித்து பேசினார். 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், சித்தராமையாவுக்கு தான் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கூட்டு தலைமையின் கீழ்...
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனையை சேகரித்த மதுசூதன் மிஸ்திரி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு, நிர்வாகிகள் கூறிய கருத்துகளை ஒருங்கிணைத்து ஒரு அறிக்கையை தயாரித்து சோனியா காந்தியிடம் இன்று (திங்கட் கிழமை) வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில், எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பதை சோனியா காந்தி இன்றே அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கே.எச்.முனியப்பா நிருபர்களிடம் கூறுகையில், “மதுசூதன் மிஸ்திரியை நேரில் சந்தித்து எங்களின் கருத்துகளை தெரிவித்தோம். எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கினாலும், கட்சி மேலிடத்தின் முடிவை நான் ஏற்றுக்கொள்வேன்“ என்றார். மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் கூறும்போது, “வரும் நாட்களில் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் எனது கருத்துகளை தெரிவித்துள்ளேன். அதிகாரம் மற்றும் பதவி பகிர்ந்து அளிக்க வேண்டிய அவசியம் குறித்தும் கூறினேன். கூட்டு தலைமையின் கீழ் கட்சியை பலப்படுத்த வேண்டியதின் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினேன். எங்களிடம் சேகரித்துள்ள கருத்துகளை சோனியா காந்தியிடம் மதுசூதன் மிஸ்திரி தெரிவிப்பார். அதன் அடிப்படையில் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும்“ என்றார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையாவுக்கு வழங்கினால், மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்ற கருத்தையும் சிலர் முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.