தமிழக அரசின் அனுமதி தேவை இல்லை மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம்
மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும், எனவே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.
பெங்களூரு,
மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும், எனவே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.
புதிய அணை
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்திற்கு கர்நாடக அரசின் காவிரி நீராவரி நிகம நிறுவனம் ஒரு கடிதம் எழுதியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக சிவனசமுத்திரம் மற்றும் மேகதாது இடையே 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ராமநகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா, கனகபுரா தாலுகா மற்றும் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஆகிய 3 இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
வரலாற்று தலம் மூழ்காது
கொள்ளேகால் தாலுகாவில் அணை கட்டினால் அதிகளவில் வனப்பகுதி தண்ணீரில் மூழ்கும். வரலாற்று சிறப்பு வாய்ந்த தலமான மேகதாது என்ற இடமும் தண்ணீருக்குள் சென்றுவிடும். மேலும் அங்கு அணை கட்டும் பணிகளை மேற்கொள்வது என்பது மிக கடினமானதாக இருக்கும்.
கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது அருகே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அணை கட்ட அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தை எளிதாக சென்றடைய முடியும். கட்டுமான பணிகளையும் பிரச்சினை இன்றி மேற்கொள்ள முடியும். இது மேகதாது என்ற இடத்தில் இருந்து 1.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அணை நிரம்பினாலும் அந்த வரலாற்று தலம் தண்ணீரில் மூழ்காது. அந்த அணையில் 67.16 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
வன உயிரினங்களுக்கு தண்ணீர்
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவில் அணை கட்டினால், அதிகளவில் தண்ணீர் வரும்போது, அதிகப்படியான வனப்பகுதி தண்ணீரில் மூழ்கும். மேலும் சிவனசமுத்திரத்தில் நீர்மின் உற்பத்தி நிலையின் பெரும்பகுதி தண்ணீருக்குள் சென்றுவிடும். அதனால் தான் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது அருகே புதிய அணை கட்டுவது என்பது சரியாக இருக்கும். அதனால் தான் நாங்கள் மூன்றில் இந்த பகுதியை தேர்வு செய்துள்ளோம்.
இந்த திட்டத்தின் மூலம் 4 ஆயிரத்து 996 எக்டேர் வனப்பகுதி தண்ணீரில் மூழ்கும். இது மாநிலத்தில் உள்ள மொத்த வனப்பகுதியில் 3 சதவீதம் ஆகும். இங்கு அணை கட்டுவதன் மூலம் மனிதர்களுக்கும், யானை போன்ற வன உயிரினங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும். இதனால் மனிதர்கள் மற்றும் யானைகளுக்கு இடையே ஏற்படும் மோதல் போக்கு தவிர்க்கப்படும். அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வசதி கிடைக்கும். மேலும் தீவனம் அதிகமாக வளரும். இது வன உயிரினங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
மீன் உற்பத்தியை பெருக்க...
மேலும் மீன்கள் வளர்க்க உதவும். இதன் மூலம் மீன் உற்பத்தியை பெருக்க முடியும். இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலத்திற்கு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும். மாத கால அட்டவணைப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடவும், பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் மேகதாதுவில் அணை கட்டுவது என்பது மிக அவசியமானது.
புதிய அணை கட்டுவது, சுப்ரீம் கோர்ட்டால் திருத்தப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. அதனால் மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு சொந்தமாக முடிவு செய்துகொள்ள முடியும். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதை மாநில அரசு உறுதி செய்யும்.
சுமுக தீர்வு
கூடுதலாக திறக்கப்படும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. 45 ஆண்டு வரலாற்றில் 30 ஆண்டுகள் உபரி நீர் கடலில் சென்று கலந்துள்ளதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. நன்றாக மழை பெய்யும் காலத்தில் மேகதாது அணையில் உபரிநீரை தேக்கி வைத்துக்கொள்ள முடியும். தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்க முடியும். தகுதி அடிப்படையில் புதிய அணை கட்டுவது என்பது சரியானதே.
இந்த விஷயத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே சுமுக தீர்வு என்ற கேள்வியே எழுவது இல்லை. அதனால் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மாநில அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதம் மூலம் மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக அரசின் ஒப்புதல் தேவை இல்லை என்பதை காவிரி நீராவரி நிகம நிறுவனம், மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.