கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை இளைஞர் காங்கிரசார் தேர்தல் வாக்குறுதி
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று இளைஞர் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
மும்பை,
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று இளைஞர் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
வாக்குறுதி
மராட்டிய சட்டசபை தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மராட்டிய மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜித் தாம்பே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலையொட்டி ஆயிரக்கணக்கான பரிந்துரைகள், பார்வைகள் மற்றும் யோசனைகள் இதுவரை கிடைத்துள்ளன. இதில் இருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து இளைஞர் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கி உள்ளது.
கல்வி கடன்
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மராட்டியத்தில் அமைந்தால் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி வரை மாணவர்கள் பெற்ற கல்வி கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அரசு விடுதிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளி வாலிபர்களுக்கு இலவச உயர்கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்.
ரூ.5 ஆயிரம் நிதிஉதவி
படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீதம் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.
தனித்துவமான, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு பல்கலைக்கழகம் நிறுவப்படும். மேலும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு ரூ.200 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
சுற்றுலா துறை
போதைப்பொருள் எதிர்ப்பு சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துவதுடன், அனைத்து மாணவர்களுக்கும் இலவச பொது போக்குவரத்து உறுதி செய்யப்படும்.
காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசாங்கம் மராட்டியத்தில் உள்ள அனைத்து பாரம்பரிய கோட்டைகளையும் புதுப்பித்து கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதை உறுதி செய்வதுடன் சுற்றுலா துறையை மேம்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.