சேலம் குகை பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு - முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

சேலம் குகை பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2019-10-05 22:00 GMT
சேலம், 

சேலம் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட குகை சிவனார் தெருவில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மதியம் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கும் மதுபிரியர்கள் அங்குள்ள குடியிருப்புகள் பகுதியில் நின்றவாறு மது அருந்தி வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் ஏற்கனவே மனு ஒன்று அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், டாஸ்மாக் கடையில் இருந்து 15 அடி தூரத்தில் ராமலிங்க மடம் தெரு உள்ளது. இதனால் அந்த பகுதிக்கு டாஸ்மாக் கடையை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை சிவனார் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கையில் கோரிக்கை மனுக்களுடன் ராமலிங்க மடம் தெருவில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இங்குள்ள டாஸ்மாக் கடையால் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. மதுபிரியர்கள் சாலையில் நின்றவாறு மது அருந்துகிறார்கள். இதனால் அந்த வழியாக பெண்கள் நடந்து செல்லமுடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே, ராமலிங்க மடம் தெருவில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க விடமாட்டோம் என்று பெண்கள் ஆவேசத்துடன் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உத்தரவாதம் அளித்தனர். இதனால் பெண்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்