பொள்ளாச்சி அருகே, உடலில் காயங்களுடன் சிறுவன் மர்மசாவு - உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு
பொள்ளாச்சி அருகே உடலில் காயங்களுடன் சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். இதுதொடர்பாக உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,
காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 22). இவர்களுக்கு அழகுவேல் (5), மதியழகன் (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்தனர்.
தற்போது பேச்சியம்மாள், தர்மபுரியைச் சேர்ந்த ஜெயமணி என்ற பெண்ணுடன் பொள்ளாச்சி அருகே நல்லூர் மாகாளியம்மன் கோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இதற்கிடையில் பேச்சியம்மாளுக்கு, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தை சேர்ந்த உறவினர் பிரகாஷ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் நல்லூருக்கு வந்த பிரகாஷ், பேச்சியம்மாளுடன் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சிறுவன் மதியழகன் வீட்டில் மயங்கி கிடந்ததாக கூறி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுவனை பேச்சியம்மாள், பிரகாஷ் ஆகியோர் தூக்கி கொண்டு வந்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் சிறுவனின் முகம் உள்பட உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த டாக்டர் இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதனை அறிந்த பிரகாஷ் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடி விட்டார். தகவல் அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் சின்னகாமணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் பிரகாஷ் தலைமறைவானதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
இதுதொடர்பாக பேச்சியம்மாள், அவரது உறவினர் ஜெயமணி ஆகியோரிடம் போலீசார் தனி, தனியாக விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் நடந்த பிரச்சியைில் பிரகாஷ் சிறுவன் மதியழகனை தள்ளி விட்டதில் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. தலைமறைவாக உள்ள பிரகாஷ் சிக்கினால்தான் உண்மைநிலை முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள பிரகாசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே சிறுவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.