தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேர போக்குவரத்துக்கு அனுமதி வழங்க கோரி கூடலூரில் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதம்

தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேர போக்குவரத்துக்கு அனுமதி வழங்க கோரி கூடலூரில் அனைத்து கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2019-10-05 22:45 GMT
கூடலூர்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியில் இருந்து முத்தங்கா புலிகள் காப்பகம் வழியாக கர்நாடகா மாநிலம் குண்டல்பேட்டுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக குண்டல்பேட்டுக்கு மற்றொரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. முத்தங்கா, பந்திப்பூர், முதுமலை புலிகள் காப்பகங்கள் வழியாக சாலைகள் செல்வதால், அதில் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது என பெங்களூரு ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சாலைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் சுல்தான்பத்தேரியில் இருந்து குண்டல்பேட்டுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை பகல் நேரத்திலும் மூட வாய்ப்பு உள்ளதாக கூறி கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் சுல்தான்பத்தேரி-குண்டல்பேட் சாலையை மூடக்கூடாது என்றும், இரவு நேர போக்குவரத்துக்கு அனுமதிக்க கோரியும் நேற்று முன்தினம் வயநாடு எம்.பி.யும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

வயநாடு பகுதி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கூடலூர் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கூடலூர் தொகுதி தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கூடலூர் காந்தி திடல் மைதானத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமை தாங்கினார். தி.மு.க. நிர்வாகிகள் ராஜேந்திரன், லியாகத் அலி, காங்கிரஸ் கோ‌ஷிபேபி, கே.பி.முகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வாசு, குஞ்சு முகமது, இந்திய கம்யூனிஸ்டு பாலகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முஸ்லிம் லீக் அனிபா, விடுதலை சிறுத்தைகள் கட்சி சகாதேவன், ராஜேந்திரபிரபு, மனித நேய மக்கள் கட்சி சாதிக்பாபு ஆகியோர் உள்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சுல்தான்பத்தேரி, கூடலூர் மற்றும் குண்டல்பேட் இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும், ஓவேலி பகுதிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும், பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பொதுமக்களின் நலன் கருதி விரைவாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் கூடலூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்காததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கூடலூர், வயநாடு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் வயநாடு-குண்டல்பேட் தேசிய நெடுஞ்சாலையை மூட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது. இதை கண்டித்தும், 24 மணி நேரமும் வாகன போக்குவரத்தை அனுமதிக்க கோரியும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதுதவிர கூடலூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்தவித உதவிகளும் இதுவரை செய்ய வில்லை.

மேலும் ஓவேலி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வீடுகள் கட்டுவதற்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுவது இல்லை. இதேபோல் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவை கூடலூர் பகுதியில் முழுமையாக முடங்கி உள்ளது. எனவே பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவையை சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்